பாபர் மசூதி இடிப்பு வழக்கு; லக்னோ நீதிமன்றத்தில் அத்வானி வாக்குமூலம்: வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜரானார்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தார். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கும், சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும் அனுமதி கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதில், 2வது வழக்கில் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.

தற்போது, கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தீர்ப்பை அளித்த அதே நேரம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை வரும்  ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விசாரித்து முடிக்கும் கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கொரோனா ஊரடங்கு நேரத்திலும் லக்னோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினமும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களின்  வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் நிலவுவதால், தற்போது பாஜ தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராகி வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜ மூத்த தலைவரான அத்வானி (92), வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அத்வானியின் வழக்கறிஞர்கள் விமல் குமார் வத்சவா, கேகே மிஸ்ரா மற்றும் அபிஷேக் ரஞ்சன் ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர். அப்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அத்வானி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

பூமி பூஜைக்கு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலக மண்

அயோத்தியில் 161 அடி உயரத்தில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலுக்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த பூமி பூஜைக்காக, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஜோஷியிடம் 1050 கேள்வி

பாஜ மூத்த தலைவர் மனோகர் ஜோஷி (86) நேற்று முன்தினம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவரிடம் 1050 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், தான் நிரபராதி என்றும் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசினால் வழக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related Stories: