இஸ்ரேல் தூதர் உறுதி பிரதமர் நெதன்யாகு உயிருடன் இருக்கிறார்: காபி ஷாப் வீடியோ ஏஐ அல்ல

 

புதுடெல்லி: ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்து விட்டாரா என சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு காரணம், கடந்த 12ம் தேதி நெதன்யாகு நாட்டு மக்களுக்கு உரையாடும் வீடியோ ஒன்றில் அவருக்கு 6 விரல்கள் இருப்பதாக காட்டப்பட்டது. எனவே இது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தயாரிக்கப்பட்ட வீடியோ என்றும் நெதன்யாகு இறந்திருக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மறுத்தது.

இதற்கிடையே, தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில், சாலையோர மினி மார்க்கெட்டில் பிரதமர் நெதன்யாகு காபி குடித்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இஸ்ரேல் பிரதமர் அலுவலக சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில் நெதன்யாகு, ‘‘எனது விரல்களை எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு காபிக்காக சாக வேண்டியிருக்கு’’ என கிண்டலாக பேசினார். ஆனால் இந்த வீடியோவும் ஏஐயால் உருவாக்கப்பட்டது என எலான் மஸ்கின் எக்ஸ் உருவாக்கிய க்ரூக் ஏஐ அசிஸ்டென்ட் பதிலளித்துள்ளது. பயனர் ஒருவர் நெதன்யாகுவின் வீடியோ குறித்து கேட்டதற்கு க்ரூக் இவ்வாறு பதிலளித்தது மீண்டும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரானியர்களும் அவர்களின் கூட்டாளிகளும் பரப்ப முயலும் தவறான தகவல் இது. பிரதமர் நெதன்யாகு மிகவும் நலமாக இருக்கிறார். காபி கடையில் எடுக்கப்பட்ட வீடியோ ஏஐ அல்ல. பிரதமர் நெதன்யாகு உயிருடன் இருக்கிறார். நான் இஸ்ரேலில் இருந்தபோது அவரை நேரில் சில முறை சந்தித்துள்ளேன். எனவே கவலை வேண்டாம்’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, பொதுமக்களை சந்தித்து பேசும் புதிய வீடியோவை நெதன்யாகு நேற்று வெளியிட்டுள்ளார்.

Related Stories: