10, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: சிபிஎஸ்இ எச்சரிக்கை

 

புதுடெல்லி: 10, 12ம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், “10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள சில குறிப்பிட்ட ஆசிரியர்கள் சமூக ஊடக தளங்களில் கருத்துகள், தங்கள், அனுபவங்களை வௌியிடுவது வாரியத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு வௌியிடப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்துவதுடன், உண்மைக்கு புறம்பானவையாக உள்ளது. மேலும், இதுபோன்ற பதிவுகள் மாணவர்களிடையே குழப்பம், வதந்திகளை பரப்பும் திறன் கொண்டவை. குழுவின் மதிப்பீட்டு செயல்முறைகள் ரகசியமானது மற்றும் கடுமையான நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. எனவே, பொதுதளங்களில் தவறான தகவல், அனுபவங்கள் அல்லது கருத்துகளை பதிவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது தொழில்முறை நடத்தையை மீறும் செயல்.

எனவே, ஆசிரியர்கள் கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், தேர்வு முறையின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து மதிப்பீட்டாளர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் ரகசியத்தன்மை, கண்ணியம் மற்றும் தொழில்முறை விதிகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறின்றி, செயல்படும் நபர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.

Related Stories: