புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னைகளை எழுப்பினார். அப்போது பேசிய கார்கே, “ மேற்காசிய போர் காரணமாக, எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் என்பதை அரசாங்கம் முன்பே அறிந்திருந்தும், அதனை சமாளிக்க எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. இதனால் நாட்டின் பல துறைகள் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய நெருக்கடி அரசாங்கத்தின் பரிதாபகரமான நிர்வாகம், அதன் வௌியுறவு கொள்கையில் உள்ள குறைபாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எல்பிஜி தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறார். ஆனால் கள நிலவரமோ அரசின் கூற்றுகள் தவறு என நிரூபிக்கிறது. இந்த பிரச்னையில் அரசாங்கம் உடனே தலையிட்டு, கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பொதுமக்களுக்கும், அனைத்து சிறு வியாபாரிகளுக்கும் மலிவு விலையில் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
ஒன்றிய அமைச்சரும், அவை தலைவருமான ஜே.பி.நட்டா பதிலளித்து பேசுகையில், “நெருக்கடியான காலகட்டத்திலும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறது. இது வருத்தம் அளிக்கிறது. நெருக்கடியான சூழலில், அமைதியான மக்களை காங்கிரஸ் தூண்டி விடுகிறது” என காட்டமாக தெரிவித்தார்.
