புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுழைவு வாயிலில் வாகன தடுப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. வாகன தடுப்பு அரண் மேலே உயர்த்தப்பட்டால் மட்டுமே வாகனங்கள் உள்ளே நுழைய முடியும். நேரடியாக வாகனங்கள் நுழைவதை தடுக்கும் வகையில் வாகன பாதுகாப்பு அரண் செயல்படுத்தப்படும். இந்நிலையில் நேற்று காலை விஜய் சவுக் அருகே அமைந்துள்ள நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பலத்த காற்றின் காரணமாக வாகன தடுப்பு அரண் தானாக கீழே விழுந்ததாக தெரிகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற வாளகத்தின் பாதுகாப்பு பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். இதனிடையே பலத்த காற்றினால் வாகன தடுப்பு அரண் கீழே விழுந்ததா அல்லது அந்த நேரத்தில் வளாகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்த காரின் நுழைவு அடையாள ஸ்டிக்கரை அடையாளம் காணத்தவறியதால் கீழே விழுந்ததா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது அங்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த பாதுகாப்பு எச்சரிக்கை அலாரம் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்பது உறுதி செய்யப்பட்டது. 2023ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவத்தை தொடர்ந்து 2024ம் ஆண்டு மே மாதம் மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் நாடாளுமன்ற கட்டிடத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாப்பதற்காக சுமார் 3300 வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
