ரம்ஜான், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மார்ச் 19, 20ம் தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிப்பு!

டெல்லி: ரம்ஜான், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மார்ச் 19, 20ம் தேதிகளில் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, வார இறுதி நாட்களான மார்ச் 28, 29ம் தேதிகளில் அமர்வு கூடும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ரம்ஜான், நவராத்திரி பண்டிகையை ஒட்டி, மார்ச் 19, 20ம் தேதிகளில் அவைக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதனை ஏற்று, மார்ச் 28, 29 ஆகிய வார இறுதி நாட்களில் மாநிலங்களவை செயல்படும் என மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தின்போது, மார்ச் 19ம் தேதி முதல் நவராத்திரி, குடிபாட்வா, ரமலான் போன்ற பல்வேறு பண்டிகைகள் தொடங்க உள்ளதால் அந்த நாட்களில் அவை கூட்டங்களை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் தெரிவித்துள்ளதாவது; “இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு சாதகமாகப் பரிசீலித்துள்ளது என்பதை உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதன்படி, வியாழன், மார்ச் 19, 2026 மற்றும் வெள்ளி, மார்ச் 20, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த அவைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எனினும், இவ்வாறு இழக்கப்படும் நேரத்தை ஈடுசெய்யும் வகையில், அதற்கு மாற்றாக சனிக்கிழமை, மார்ச் 28, 2026 மற்றும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026 ஆகிய தேதிகளில் அவை கூடும். உறுப்பினர்கள் தயவுசெய்து இதனைக் குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

Related Stories: