ஒடிசா அரசு மருத்துவமனையில் பயங்கர தீ 10 நோயாளிகள் கருகி பலி: 11 ஊழியர்கள் காயம்

 

கட்டாக்: ஒடிசாவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 ஊழியர்கள் காயமடைந்தனர். பாஜ ஆளும் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.

அப்போது நோயாளிகளும் மருத்துவ ஊழியர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், புகை மூட்டம் பரவியதை உடனடியாக யாரும் கவனிக்கவில்லை. இந்த தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்த நோயாளிகளுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். தீயணைப்பு துறை ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், போலீசார் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 7 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 நோயாளிகள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்படும் போது சிகிச்சை பலனின்றி பலியாகினர். மீட்கப்பட்ட நோயாளிகளில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தவிர, மீட்பு பணியின் போது புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 23 மருத்துவமனை ஊழியர்களும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்ற 10 நோயாளிகள் பாதுகாப்பாக புதிய மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘தீ விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீ தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்.

முதல் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* ரூ.27 லட்சம் நிதியுதவி

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, ‘‘உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ஒடிசா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: