45,000 டன் எல்பிஜியுடன் குஜராத் துறைமுகம் வந்தது இந்திய கப்பல்: மற்றொரு கப்பல் இன்று வருகை

 

அகமதாபாத்: நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, 45,000 டன் எல்பிஜியுடன் இந்திய கப்பல் குஜராத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. ஈரான், ஓமனுக்கு இடையே பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் வெளியேற ஈரான் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 92,700 டன் எல்பிஜி ஏற்றிய சிவாலிக், நந்தா தேவி ஆகிய இரு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 14ம் தேதி கடந்து இந்தியா நோக்கி வந்தன.

இதில் சிவாலிக் கப்பல் திட்டமிட்டபடி குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நேற்று மாலை 5 மணிக்கு வந்தடைந்தது. இதில் 45 ஆயிரம் டன் எல்பிஜி சமையல் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளது. நந்தா தேவி கப்பல் இன்று அதிகாலை குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ஜக் லாட்கி கப்பல் 80,800 டன் கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. போர் ஆபத்துகள் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தியில் இன்னமும் 22 இந்திய கப்பல்கள் சிக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

Related Stories: