புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவித்த 550 இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சவாலான நேரத்தில் உதவியதற்காக ஆர்மீனியா அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து ஆர்மீனியாவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பெல்ஜியத்திற்கு 2 நாள் பயணமாக நேற்று புறப்பட்டார். முன்னதாக அவர் தனது சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானில் இருந்து இதுவரை 550க்கும் மேற்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வர உதவி அளித்த ஆர்மீனியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் அவர்கள் அளித்து வரும் ஆதரவை பெரிதும் பாராட்டுகிறேன்’’ என கூறி உள்ளார்.
