ஊரடங்கால் ஆடி அமாவாசை தரிசனம் ரத்து: சதுரகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வத்திராயிருப்பு:கொரோனா ஊரடங்கால் சதுரகிரியில் இன்று ஆடி அமாவாசை திருவிழா தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனையொட்டி பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  ஆடி அமாவாசை திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டில் கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஊரடங்கால், ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 31ம் தேதி வரை சதுரகிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வழக்கமாக ஆடி அமாவாசையன்று தரிசனம் செய்யும் பக்தர்கள், இன்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தடையை மீறி பக்தர்கள் வராமல், தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் எஸ்பி பெருமாள் செய்துள்ளார். இதன்படி அழகாபுரி கிருஷ்ணன்கோவில், மாவூத்து செல்லும் வழி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, மந்தித்தோப்பு தாணிப்பாறை வனத்துறைக்கு கேட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஆடி அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில், புனித நீராடுவது வழக்கம். ஊரடங்கை ஒட்டி கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: