மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றத்தால் சிமென்ட் சாலை சேதம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம்-சென்னை செல்லும் இசிஆர் சாலையொட்டி நெம்மேலி குப்பம் உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இங்கு, கடந்த சில மாதங்களாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. அடிக்கடி கடலில் உருவாகும் ராட்சத அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி குடியிருப்பு பகுதிக்கு அருகே தாக்குவதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சிமென்ட் சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. தற்போது, மீண்டும் அதே சிமென்ட் சாலையின் ஒரு பகுதி இரண்டு நாட்களுக்கு முன்பு கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்தது. நெம்மேலி, மீனவர் குப்பத்துக்கு அருகே உள்ள சூளேரிக்காடு குப்பத்தில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை உள்ளது. இந்த, ஆலைக்கு கடலில் இருந்து கடல் நீர் எடுத்து வருவதற்காக இராட்சத குழாய்கள் அமைக்க பல அடி தூரத்திற்கு கருங்கற்கள் கொட்டப்பட்டன.

மேலும், அங்கு கொட்டப்பட்ட கற்களால் அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் கடல் அலையின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால், அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் கரையில் நிறுத்தி வைக்கும் படகுகள் ராட்சத அலையில் சேதமடைகிறது.இதனால், அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கடந்தாண்டு மீன்வள மானியக் கோரிக்கையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை மீனவளத்துறை அதிகாரிகள் விரைந்து தொடங்க வேண்டும், என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றத்தால் சிமென்ட் சாலை சேதம் appeared first on Dinakaran.

Related Stories: