இந்நிலையில், குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி இணைப்பு சாலையை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை அருகே ரயில்வே ஐந்து கண் பாலம் ஒட்டியபடி ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை இணைக்க கூடிய 200 மீட்டர் நீளமும், 40 அடி அகலமும் கொண்ட இணைப்பு சாலை உள்ளது.
இதனை அருள்நகர், ஜெகதீஷ் நகர், மீனாட்சி நகர், எம்ஜி நகர், பத்மாவதி நகர், லட்சுமி நகர், ராகவேந்திரா காலனி, ஆனந்தா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டோர், அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் என அனைத்து தரப்பு பொதுமக்களும் காலம் காலமாக சாலை பயன்படுத்தி வருகின்றனர். இதில், மேற்படி சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் சாலையின் அங்காங்கே குளம்போல் காட்சி அளிப்பதுடன் சேறும், சகதியுமாகவும், வெயில் காலங்களில் புழுதி நிறைந்த சாலையாகவும் காட்சியளித்து வருகிறது.
இதனை சீரமைத்து தர கோரி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு மேற்படி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி இடையே குண்டும், குழியுமான இணைப்பு சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.