அரசு மேய்க்கால் புறம்போக்கு இடம், பெல்ட் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு மின்னிணைப்பும், பட்டாவும் வழங்க வேண்டும்: சட்டசபையில் திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வலியுறுத்தல்

திருப்போரூர்: அரசு மேய்க்கால் புறம்போக்கு இடம், பெல்ட் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு மின்னிணைப்பும், பட்டாவும் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது: சென்னை புறநகர் பகுதிகளில் காணுகின்ற பல இடங்களில், காலியாக உள்ள இடங்களிலெல்லாம் குப்பைகள் மேடுகளாக, மலைகளாகக் குவிக்கப்பட்டிருக்கின்றன.

கழிப்பட்டூர் உப்பங்கழியிலும், பக்கிங்காம் கால்வாயின் கானத்தூர் பகுதி, புதுப்பட்டினம் சட்ராஸ் பகுதி, கேளம்பாக்கம்-கோவளம் சாலை, திருப்போரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. எனவே, இனிமேல் குப்பைகளை முறைதவறி, தேவையில்லாத இடங்களில் கொட்டுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கின்ற வகையில், தடுப்புக் காவல் சட்டத்திலே அவர்களை கைது செய்யக்கூடிய வகையிலே சட்டத் திருத்தம் ஒன்று வேண்டும்.

திடக் கழிவை, திரவக் கழிவை கையாளுவதற்கென்று தனியாக ஒரு துறை அமைக்க வேண்டும். சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு மூலம் திருப்போரூர் தொகுதியில் கோத்ரெஜ் நிறுவனம் ரூ.515 கோடியில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இதுதொடர்பான நிலை குறித்து அமைச்சரிடம் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். அன்னிய முதலீடுகள், உள்நாட்டு பிற மாநில நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவை மூலம் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.

ஆனால், இதில் உள்ளூர் மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள், தமிழர்கள் என்று நான் சொல்லவில்லை, தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு இதில் என்ன வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதைப் பார்க்கின்றபோது, அது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை இந்த நிறுவனங்களில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை, தொழிற்சாலைகளில், குறிப்பாக அரசு நிறுவனங்களில், அரசு தொழிற்பேட்டைகளில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் அவர்களுக்கு இடமளிக்க வேண்டும். இ-வாகன உற்பத்தியில், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இ-வாகனங்களைப் பயன்படுத்துவதில் என்ன திட்டங்களை அரசு வைத்திருக்கிறது.
விளிம்பு நிலையில் அடித்தட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கானோர் அரசு மேய்க்கால் புறம்போக்கு இடங்களிலும், பெல்ட் ஏரியா என்று வகைப்படுத்தப்பட்ட இடங்களிலும் வசிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கின்றனர்;

ஆதார் அட்டை வைத்திருக்கின்றனர், உணவு பொருள் அட்டை வைத்திருக்கின்றனர்; பட்டா இல்லை. இன்னும் சொல்லப்போனால், மின்னிணைப்புக்கூட இல்லை. நீதிமன்ற உத்தரவு காரணமாகக் காட்டப்படுகிறது. மக்கள் நீதிமன்றத்தை அல்ல, சட்டமன்றத்தை, மக்கள் பிரதிநிதிகளை நம்புகின்றனர். நீதிமன்ற உத்தரவுகளைக் கடந்து, சட்டமன்றத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டமன்றம் மக்களுக்கே என்பதை உணர்ந்துகொண்டு, உரிய சட்டத்தைக் கொண்டுவந்து, மேய்க்கால் இடங்களில் வசிப்பவர்களுக்கு மின்னிணைப்பும், பட்டாவும் வழங்க வேண்டும்.

திருப்போரூர் பேரூராட்சிக்கு புதிய கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும். திருப்போரூரில் ஆர்டிஓ அலுவலகம் அமைக்க வேண்டும். திருக்கழுக்குன்றத்தில் கலைஞர் திறந்த மீன் மார்க்கெட் பயன்படுத்த முடியாத நிலையிலே இருக்கிறது. அதற்கு, உடனே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். திருக்கழுக்குன்றத்திற்கு பாதாள சாக்கடை திட்டம். நிலை உயர்த்தப்பட்ட சிறுதாவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு மேய்க்கால் புறம்போக்கு இடம், பெல்ட் ஏரியாவில் வசிப்பவர்களுக்கு மின்னிணைப்பும், பட்டாவும் வழங்க வேண்டும்: சட்டசபையில் திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: