பெண் ஆசிரியைகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக பயிற்சியாளரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் பங்கேற்ற பெண் ஆசிரியைகளை இழிவுப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் குழுவில் பேசி பயிற்சியாளரை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மகிழ்ச்சியான கல்வி சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு அரசால் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் வகையில், 2025ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய 5 வட்டங்களில் இருந்து தலா 8 ஆசிரியர்கள் என 40 ஆசிரியர்களுக்கான பயிற்சி சுங்குவார்சத்திரம் அருகிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் 2 ஆசிரியர் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தை சேர்ந்த 2 பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதில், தமிழ் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் கந்தவேல் என்பவர், பெண் ஆசிரியர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. தொடர்ந்து சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் பெண் ஆசிரியர்களை இழிவுபடுத்தியும், இதுகுறித்து அரசின் எந்த உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் எனக்கு பயமில்லை என்று தெரிவித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே இதனை கண்டித்தும், பெண் ஆசிரியர்களை இழிவுபடுத்திய பயிற்சியாளர் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் காஞ்சிபுரம், செவிலிமேடு பயிற்சி மையத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெய்சங்கரிடம் கேட்டபோது, களியாம்பூண்டி ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் கந்தவேல் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிரச்னை ஏற்படாமல் இருக்க அனைத்து மையங்களுக்கும் சென்று வந்தேன்.

பயிற்சி சுமுகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த பிரச்னை குறித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளேன். அதன் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், துறை இயக்குநரிடம் புகார் அளித்து கந்தவேலை பணியிடை நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்தார். இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

* ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். மகாலட்சுமி வரவேற்றார்.

இதில், அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் ஜோசப், லூக்சாமுவேல், ரமேஷ், முருகன், சுரேஷ், மணிமோகன், மாத்தேயு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

* எஸ்பியிடம் புகார்
எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் அநாகரீகமாக நடந்து கொண்டு, பயிற்சியாளர் கந்தவேல், பெண் ஆசிரியர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் அவர் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் பாலாஜி, மகளிர் அணி செயலாளர் வந்தனா ஆகியோர் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் கந்தவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு சார்பிலும் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

The post பெண் ஆசிரியைகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக பயிற்சியாளரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: