இந்த, கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்துதான் இங்கிருந்து பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் நகர் பகுதியில் நாளுக்குநாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இதனால் அலுவலகங்கள், உணவகங்கள், இறைச்சி கடைகள் உள்ள பகுதிகளில் நாய்களின் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.
ஒருசில நேரங்களில் இந்த நாய்கள் சாலையை கடக்கும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி கை, கால் முறிவு மட்டுமின்றி உயிரிழப்பு வரையிலான விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை ஒருபுறம் இருக்க இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிகளை பின்தொடர்ந்து துரத்தி கடிப்பது, நடந்து செல்பவர்களை கடிப்பது போன்ற சம்பவங்கள் இங்கு தொடர்கதையாக உள்ளன.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் தெரிவித்தாலும், பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் நகர் பகுதியில் 100க்கான நாய்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் கூட்டம், கூட்டமாக சுற்றிதிரிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள் என அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.
இதுபோன்ற நாய்களை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் நாய்களை பிடிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் இதனால் வரை மேற்கொள்ளவில்லை. எனவே, தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
* இரவு தொடரும் தொல்லை
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் வாலாஜாபாத் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம புற பகுதியிலிருந்து நாள்தோறும் சுழற்சி முறையில் வேலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு, இரவு பணி முடிந்து வீட்டிற்கு வருபவர்களை நாள்தோறும் தெரு நாய்கள் துரத்தி கடிப்பது தொடர்கதையாக மாறி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் தொடரும் நாய்களின் தொல்லைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தெருநாய் கடித்து 3 மாணவர்கள் படுகாயம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்திற்கு சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தில் வெறிபிடித்து சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்களை துரத்திச் சென்றது. ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களை தெரு நாய் விரட்டிக் கடித்தது. இதில் மூன்று மாணவர்களும் படுகாயமடைந்தனர். மாணவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* நாய்க்கடி ஊசிக்காக…
வாலாஜாபாத் அரசு மருத்துவமனை நாள்தோறும் வாலாஜாபாத் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நோயாளிகள் சிகிச்சைக்காக நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களில் நாய்க்கடி ஊசிக்காக நாள்தோறும் வாலாஜாபாத் மட்டும் இன்றி சுற்று வட்டார பகுதிகளில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
The post வாலாஜாபாத் பேரூராட்சியில் தெருக்களில் கூட்டம் கூட்டமாக உலா வரும் நாய்களால் தொல்லை: அச்சத்தில் பொதுமக்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.