கடலூர்: கொளுத்தும் கத்திரி வெயிலால் கடலூரில் வீடுகளை நோக்கி பாம்புகள் படையெடுத்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் கொடுமை அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் நகர் பகுதிகளில் முக்கியமான சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கிராம பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். கொளுத்தும் வெப்பத்தால், தார்ச்சாலை மற்றும் வயல்வெளிகளில் சூடாகி கொதித்து வருகிறது. இதனால் முட்புதர்கள் மற்றும் வயல் வெளிகளுக்குள் இருக்கும் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் குளிர்ச்சி மற்றும் தண்ணீர் உள்ள வீடுகளை தேடி சென்று அடைகின்றன.
வீடுகளுக்குள்ளும் தோட்டங்களுக்குள் குளிர்ந்த சூழல் பாம்புகளை ஈர்க்கிறது. தோட்டங்களில் கற்குவியல்கள், குப்பை கூளங்கள், தட்டுமுட்டுகள் ஆகியவற்றில் தங்கியிருக்கும் தவளை, தேரை, ஓணான் போன்ற உயிரினங்களை சாப்பிடவும் பாம்புகள் வந்து சேருகின்றன. கடலூரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வீடுகளில் இருந்து பாம்புகள் பிடிக்கப்பட்டன. கடலூர் நத்தப்பட்டு பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயல் வெட்டப்பட்ட நிலையில் அங்கிருந்த விஷபாம்புகள் சுட்டெரிக்கும் வெய்யில் தாங்காமல் வீட்டு தோட்டத்தில் கற்கள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் தஞ்சமடைந்தன.
தகவல் அறிந்த பிராணிகள் நல ஆர்வலர் செல்லா அவற்றை பிடித்தார். அதுபோல் சோரியாங்குப்பம் பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்த நான்கரை அடி நல்ல பாம்பையும் அவர் போராடி பிடித்தார். கடலூர் தௌலத் நகரில் முன்னாள் நகர மன்றத் தலைவர் குமரன் வீடு, திருப்பாதிரிப்புலியூர் பத்திரபதிவு அலுவலகத்தின் பின்புறம் உள்ள குடியிருப்பில் வருமான வரித்துறை அதிகாரியின் வீடு, கடலூர் முதுநகர் சிப்காட் பகுதியில் வீடுகளில் நல்லபாம்புகளை செல்லா பிடித்தார். வெளிச்செம்மண்டலத்தில் உள்ள ஐயனார் கோயில் அருகில் எட்டரை அடி சாரை பாம்பு இரண்டரை அடி சாரை பாம்பை விழுங்கியது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற செல்லா அந்த பாம்பை பிடித்தார். அதற்குள் அந்த பாம்பு தான் விழுங்கிய பாம்பை வெளியேற்றியது. பிடிபட்ட பாம்புகளை செல்லா வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் காப்பு காட்டில் விட்டார்.
பாம்பு வராமல் தடுப்பது எப்படி? வீடுகளுக்குள் பாம்புகள் வராமல் இருக்க செல்லா கூறிய வழிமுறைகளாவது: வீட்டைச் சுற்றிலும் துய்மையாக வைத்துக் கொள்ளவும். பழைய பொருட்கள் குவித்து வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்களை சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். தூங்கும் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயிற் கதவின் கீழ் அல்லது பக்க வாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைக்க வேண்டும். கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். காலணிகளை பொதுவாக ஷுக்களை தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும். இவ்வாறு கூறினார்.