மதுரையில் சித்திரை திருவிழா ரத்தானநிலையில் அழகருக்காக திரண்ட பொதுமக்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடன்

மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழா ரத்தான நிலையில், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரையின் முக்கியத் திருவிழாவான சித்திரை பெருவிழா ரத்து செய்யப்பட்டது. அழகர் மதுரைக்கு வந்து, வைகையாற்றில் இறங்கி திரும்பும் முக்கிய நிகழ்வு நேற்று நடைபெறுவதாக இருந்தது. இது ரத்தான நிலையில், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடமான மதிச்சியம் ஏ.வி. மேம்பாலம் அருகே நேற்று காலை பக்தர்கள் திரண்டனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆற்றின் கரையோரம் அமர்ந்து, நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினர். விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, பொங்கல் படைத்து, வெல்லம், நாட்டு சர்க்கரை, பொரிகடலை பிரசாதம் பரிமாறி சாமி கும்பிட்டனர். பக்தர் ஒருவர் வீட்டு வாசலில், தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் அமர்ந்து வரும் சிலை ஒன்றை பார்வைக்கு வைத்திருந்தார். வைகையாற்றுக்கு வந்தவர்கள், அழகர் சிலையை வணங்கினர்.  தகவலறிந்து மதிச்சியம், செல்லூர் போலீசார் வைகை ஆற்றுக்கு வந்து, அங்கு கூடியிருந்த பக்தர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்,

Related Stories: