வாழ்வாதாரத்தை இழந்த நகை பட்டறை தொழிலாளிகள்

தொண்டி: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். தொடர் கடை அடைப்பால் நகை பட்டறை தொழில் செய்வோர் முற்றிலும் வேலை இழந்து சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். வரலாற்று காலம் தொட்டே தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு அதிக நாட்டம் உண்டு. தங்கத்தின் இருப்பை வைத்தே ஒருவரின் பொருளாதாரம் மதிப்பிடப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளில் தங்கமும் ஒன்றாக மாறி விட்டது. கடந்த காலங்களில் அதிகளவு நகை கடைகள் திறக்கப்பட்டதால் ரெடிமேட் நகையின் மீது மக்களின் கவனம் திரும்பியது. இதனால் நகை பட்டறை தொழில் பாதிக்க தொடங்கியது. இருப்பினும் சிலர் தங்கள் விருப்பம் போல் நகை செய்து அணிந்து கொள்ள விரும்பியதால் ஓரளவு வேலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் முற்றிலுமாககடை அடைக்கப்பட்டதால் வருமானமின்றி தவித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து தொழிலாளி செந்தில் கூறியது, ‘‘பல வருடங்களாக நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறறேன். போதிய வருமானம் இல்லை என்றாலும் குடும்பத்தை நடத்தி வந்தோம். தற்போது ஊரடங்கால் ஒரு மாதமாக கடை அடைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியை, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகமாக நகை செய்ய விரும்புவார்கள். இதுபோன்ற நேரங்களில் வருமானம் இருக்கும். ஆனால் இம்முறை கொரோனாவால் ஊரடங்கு வந்து விட்டதால், வருமானம் இல்லாமல் போய் விட்டது. எங்களை போன்ற நலிவுற்ற கூலி தொழிலாளிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: