திருச்சியில் படிக்காதவன் படம் போல் சம்பவம் டீ கேனில் சாராயம் விற்ற பெண் குடித்து பார்த்த போலீஸ் அதிர்ச்சி: தலைமறைவானவருக்கு வலைவீச்சு

திருச்சி: படிக்காதவன் பட பாணியில் டீ கேனில் ஒரு பெண் சாராயம் விற்றுள்ளார். ஊரடங்கு வேளை என்பதால் கேனை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்த டீயை குடித்தபோதுதான் சாராயம் என அறிந்து அதிர்ச்சி அடைந்து அவரை தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குடிமகன்கள் ₹300 முதல் ₹500 வரை கொடுத்து பிளாக்கில் மதுவை (குவார்ட்டர்) வாங்கி குடித்து வருகின்றனர். அதிக விலை கொடுக்க முடியாத குடிமகன்களுக்காக கள்ள சாராயம் காய்ச்சும் பணி துவங்கியுள்ளது. இப்படி ராம்ஜிநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சாராய விற்பனை நடந்து வருகிறது. ரஜினி நடித்த பழைய ‘படிக்காதவன்’ படத்தில் நடிகை அம்பிகா கர்ப்பிணி போல வயிற்றில் பைப்பைக் கட்டிக்கொண்டு சாராயம் விற்பார். இதேபோல் திருச்சி ராம்ஜி நகரில் ஒரு பெண், டீ கேனில் சாராயம் விற்றால் போலீசார் கண்டு கொள்ளமாட்டார்கள் என நினைத்து விற்றுள்ளார்.

 ஊரடங்கு வேளையில் மக்கள் நடமாட்டம் குறித்து நேற்று முன்தினம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர், கேனில் டீ விற்று கொண்டிருந்தார். அவரிடம் கேனை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறி சென்றனர். ஆனால் அவர் காவல் நிலையம் வரவில்லை. வெகுநேரமாகியும் அவர் வராத நிலையில் கேனில் இருந்த டீயை பிடித்து குடித்து பார்த்தனர். கேனில் வந்தது டீ அல்ல; சாராயம் என்று அறிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தலைமறைவான அந்த பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories: