நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்திருவிழா கொடியேற்றம் கோலாகல துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை அமைய பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இன்று கொடியேற்றத்தையொட்டி அதிகாலையில் கொடி பட்டம் காந்திமதியானை மீது வெளிபிரகாரம் வலம் வரும் வைபவம் நடந்தது. இதைத்தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத சுவாமி சன்னதியில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் ஆனிப்பெருந்திருவிழா இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

பின்னர் கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, மாபொடி, திரவியம், தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்ச தீபாராதனை, சோடஷ தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய திருவிழா அடுத்த 10 நாட்கள் வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட வைபவம் வரும் ஜூன் 21ம்தேதி காலை நடக்கிறது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர்களை வடம் பிடித்து நிலையம் சேர்ப்பர்.

தேரோட்டத்தையொட்டி வரும் 21ம்தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து நெல்லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழக திருக்கோயில்களில் இதுவரை காணாத வகையில் பெங்களூரு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெர்பரா, கார்மோஸ், டாலியா, பூனாகி, சைபுரோஸ், ரோஜா, முல்லை, கனகாம்பரம், சாம்மங்கி, மல்லிகை, கேந்தி, செவ்வந்தி, அரளி, பச்சை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் மாலைகள் கட்டப்பட்டு கோயில் முகப்பு மண்டபம் முதல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும் தங்க கொடிமரம் மண்டபம் வரை பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

The post நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்திருவிழா கொடியேற்றம் கோலாகல துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: