கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள பெரிய கடைகளை மூட அறிவுறுத்தல்: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 3 பேர் இந்நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு  இருந்தது. தற்போது அவரும் குணமடைந்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு,  “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் செயல்படும்  அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி  நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின்; சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளையும் 10 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 10 நாட்களுக்கு அனைத்து கடைகளையும் மூடி வைத்திருக்க வேண்டும். இதேபோன்று சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் என்றும் வங்கி ஏ.டி.எம்.களை அடிக்கடி தூய்மைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: