பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலனை; கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டு தொடக்கம்!!

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய 5 ஆயிரத்து 476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதனால் குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இக்குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3 ஆயிரத்து 774 ஏக்கர், அரசு நிலம் ஆயிரத்து 972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 28ல் பரிசீலிக்கிறது. இதனிடையே பரந்தூர் விமான நிலையத்தை 4 கட்டங்களாக அமைக்க 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 2029-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The post பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பம் ஜூன் 28ல் பரிசீலனை; கட்டுமானப் பணிகள் 2026ம் ஆண்டு தொடக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: