மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது : ஐகோர்ட் அதிரடி

மதுரை : மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே பிபிடிசி என்ற தனியார் நிறுவனம், தேயிலை தோட்ட தொழிலாளர்களை ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேற சொல்வதால் செய்வதறியாது தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்டக்கழகம், களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதிகள், அங்கன்வாடிகள் போன்றவைகளில் பணி வழங்க வேண்டும். மேலும் மறுவாழ்வு ஏற்படுத்தும் வகையில், மறுப்பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்தினருக்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நெல்லை மாஞ்சோலையில் இருந்து வெளியேற்றக்கூடிய மக்களுக்கு என்ன வகையான மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் உள்ளன?. இது தொடர்பாக ஏதேனும் அறிக்கை உள்ளதா?. தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்துதரும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது. இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசும் மாநில அரசும் என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறது. அவர்களின் மறுவாழ்வுக்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன என்று மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிடுகிறோம். வழக்கு விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம், “இவ்வாறு உத்தரவிட்டனர்.

The post மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது : ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: