சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு: பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று இரவும் சென்னையின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், திருவொற்றியூர், தாம்பரம், சேலையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை முதல் மாலை வரை வெப்பம் சுட்டெரிப்பதும், இரவில் மழை குளிர்விப்பதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; சென்னையில் ஜூன் மாதத்தில் பெய்யும் மழை அளவான 6 செ.மீ.-ஐ விட தற்போது அதிகளவு மழை பெய்துள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் இன்று வரை 5 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் மேலும் 10 நாட்கள் இருப்பதால் மழை அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில் ஜூன் மாதத்தில் இன்று வரை 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜூன் மாதத்தில் இன்று வரை 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்பு: பிரதீப் ஜான் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: