வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா? ஹைட்ரோ கார்பன் திட்ட விழிப்புணர்வு கூட்டத்தில் மோதல்: வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலானப்பின் நடத்துவதா?

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் 7ம் தேதி ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகள் துவங்கின. 5 ஏக்கர் பரப்பளவில்  அமைந்துள்ள இந்த பிளாண்டில் ராட்சத இயந்திரங்கள் மூலம் பூமிக்கடியில் 3500 மீட்டர் ஆழத்திற்கு கிணறு அமைக்க துளையிடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நிலம் பாதிக்கப்படுவதாககூறி எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய பிளாண்ட் முன்பு பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தன. எனவே, போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 19ம் தேதி  மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியக்கோட்டி அழைப்பு விடுத்து 26ம்தேதி தனது அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிவித்து விவசாயிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதன்படி, நேற்று காலை ஆர்டிஓ அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வருவாய்துறை சார்பில் மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், கோட்டூர் இன்ஸ்பெக்டர் அறிவழகன், காரைக்கால் ஓஎன்ஜிசி நிர்வாகம்  சார்பில் துணை பொது மேலாளர் (ட்ரில்லிங்) ராஜசேகர் மற்றும்  போராட்டக்குழு சார்பில் 4 விவசாயிகள் வந்திருந்தனர்.இந்தநிலையில் அங்கு  வந்த காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் கூட்ட அரங்கிற்கு சென்று, தமிழக அரசு கொண்டு வந்துள்ள காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு சட்டம் அமலான பிறகு இக்கூட்டம்  நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. கூட்டத்தை ஆர்டிஓ உடனே கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடும் வாக்குவாதம் செய்தார்.மறுபுறம் போராட்டக்குழுவை சேர்ந்த ராஜ்பாலன் தலைமையிலான விவசாயிகள் மற்றும் பாண்டியனிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதையடுத்து ஓஎன்ஜிசி அதிகாரிகள் வெளியேறினர். இதன்பின், கூட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: