சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதை கண்டித்தும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இருந்த போது அந்த செலவை அரசே ஏற்றது, தற்போது நாட்டில் ஆள தெரியாத பாஜ, அதற்கு முட்டு கொடுக்கும் அதிமுக தான் உள்ளது.
தமிழகத்திற்கு நெருக்கடி வந்தாலும் சோதனை வந்தாலும் முதல்வர் தெளிவாக நம்மை வழிநடத்தி கொண்டு இருக்கிறார். திமுக கூட்டணி தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணியாகவும், தமிழகத்தை தலைநிமிர செய்யும் கூட்டணியாகவும் உள்ளது. அதிமுக கூட்டணி தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைக்கும் கூட்டணியாக உள்ளது.
சிலிண்டர் இல்லாமல் மக்கள் தமிழகத்தில் கஷ்டப்படும் போதும் கூட, பாஜவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. காஸ் பிரச்சனையை தீர்க்க கோரி ஒரு கோரிக்கை கூட வைக்கவில்லை. மோடிக்கு ஆதரவாக உள்ள எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும். எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்’’ என்றார்.
* கூட்டணி கட்சிகளுக்கு வேண்டுகோள்
செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக மன நிறைவோடு கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கூடுதலாக திமுகவிடம் வாங்கி இருக்கிறோம். எங்கள் தோழமைக் கட்சிகளை அன்போடு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உரிமையை கேளுங்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனம் இருக்கிறது. அவர் கொடுப்பார். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கொடுத்தீர்கள் என்றால், எங்களுடைய வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பு திமுக கூட்டணியில் 110 இடங்களில் நின்றோம். பிறகு 63 தொகுதிகள். அதன் பிறகு 41, பிறகு 25 தொகுதிகளில் நின்றோம். இந்த முறை 41 தொகுதிகளை எங்கள் தலைமை கேட்டது. ஆனால் அதையே அவர்கள் 28 ஆக குறைத்து கொடுத்து இருக்கிறார்கள்’’ என்றார்.
