‘ரூ.50 ஆயிரத்தை ரூ.5 லட்சமா உயர்த்துங்க…’

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நேற்று வேலூரில் அளித்த பேட்டி: சாமானிய வணிகர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் கொள்கை ரீதியான சிறப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும். போர் சூழ்நிலையில் எரிவாயு பற்றாக்குறையால் மின்சார அடுப்புகள் வாங்க 25 சதவீத மானியத்துடன் கடனுதவி மற்றும் ஓட்டல் மற்றும் டீக்கடை வணிகர்களுக்கு 2 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

வணிகர்களின் கோரிக்கைகள் ஏற்கும், கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பரிசீலித்த பின்னரே, ஒரு கோடி வணிகர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பேரமைப்பின் ஆட்சிமன்றக்குழு கூடி முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் வணிகர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லக்கூடிய ரொக்கப் பணத்தின் வரம்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது வணிகர்களை அலைக்கழிக்காமல், பறிமுதல் செய்யப்படும் பொருட்களை உரிய ஆவணங்களைக் காண்பித்தவுடன் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்துடன் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: