பாஜவின் கிளை அமைப்பு அதிமுக: தனியரசு காட்டம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு பேசியதாவது: ‘‘நாடு முழுவதும் ஒருவிதமான பதற்றத்தை ஒன்றிய பாஜ மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. வல்லரசாக்குகிறேன், நான் தான் பாரதமாதவை காப்பாற்றுகிறேன் என தம்பட்டம் பேசும் மோடி பண மதிப்பிழப்பு, கொரோனா, போர் சூழலால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என மக்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறார்.

பாஜவின் கிளை, துணை அமைப்பாக எடப்பாடி தலைமையிலான அதிமுக செயல்பட்டு வருகிறது. மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்ற மதவாத பாசிச சக்திகள் இந்த மண்ணில் காலூன்ற விடாமல் தடுத்து நிறுத்துவது இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான். இதே நிலை மீண்டும் தொடர திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். வரும் தேர்தலில் மோடி, அமித்ஷா, அதிமுக கூட்டணியை பெரும் தோல்வி அடைய செய்ய வேண்டும். என்றார்.

இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சசிகலா கட்சி ஆரம்பித்துள்ளது தாமதமான முடிவு, அதிமுகவில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால் அதுவும் திராவிட இயக்கம். ஆனால் இன்று எடப்பாடியின் தலைமையில் இருக்கும் அதிமுக, பாஜ மோடியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை எனக் கூறப்படுவதை இம்முறை தகர்த்து மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோட்டை என மாற்றுவோம். இம்முறை தமிழகத்தில் அதிமுக-தேஜ கூட்டணி கடுமையான தோல்வியை தழுவும்’’ என்றார்.

Related Stories: