திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி வழங்க திமுக தலைமை முடிவு செய்து உள்ளது. ஆனால், அவர்கள் 2 சீட் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை உயர்நிலை குழு அவசர கூட்டம் விருகம்பாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், சட்டசபை தேர்தல் குறித்தும், திமுக கூட்டணியில் எவ்வளவு தொகுதிகள் பெறலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திமுகவில் கூடுதல் தொகுதிகள் கேட்டோம். முக்கிய பிரச்னைகள் குறித்து 10 கோரிக்கைகள் கொடுத்து இருக்கிறோம். திமுகவிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை. திமுகவின் பதிலை பொறுத்து கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.
