‘பிரச்னைன்னா பனையூருக்கு ஓடி போய் படுத்துப்பாரு…’ ஒரு வீடியோ போட்டா ரூ.2 லட்சம் கிடைக்குதா? சாட்டை துரைமுருகன் பரபரப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நெல்லை தாழையூத்தில் நடந்தது. இதில் நெல்லை, நாங்குநேரி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியதாவது: வெண்ணிலவே, வெண்ணிலவே சொர்க்கம் நீயம்மா என சினிமாவில் காதல் பாடல்களை பாடிவிட்டு, தற்போது சிலர் அரசியலுக்கு வந்துள்ளனர். நெல்லையில் உள்ள திரையரங்குகளில் வரும் முன்பே விஜய்யின் ஜனநாயகன் பட டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்திற்கு விற்கின்றனர்.

ரூ.180 டிக்கெட்டை இரண்டாயிரம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கும் நீங்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறீர்களா விஜய் ப்ரோ?. இட்ஸ் வெரி ராங்க் ப்ரோ. துண்டு சீட்டில் இருப்பதை பார்த்து பேசுவது பேச்சா?. மண்ணின் பிரச்னைகளையும், மக்களின் பிரச்னைகளையும் மனசில் இருந்து பேசுங்க ப்ரோ. திரைப்படங்களில் கபடி கபடி என்றும், நான் அடித்தால் தாங்க மாட்ட, நாலு மாதம் தூங்க மாட்ட என்றும் வசனம் பேசும் விஜய் நிஜக்களத்தில் நிற்காமல் ஓடி விடுவார்.

பிரச்னைன்னு வந்தா என்னை விட்டா நிற்க மாட்டேன், பனையூரில் போய் படுத்துக் கொள்வேன். தேடமாட்டேன் என வழக்குகளைப் பார்த்து ஓடும் கோழையாக விஜய் உள்ளார். போலீஸ் டிரைனிங்கில் கூட இப்படி ஓட மாட்டாங்க… திரைப்படங்களில் கதாநாயகியை காப்பாற்றும் இவர், நிஜத்தில் உயிரிழந்த 41 பேரை காப்பாற்றவில்லை. என்மீது பல அவதூறுகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

சாட்டை முருகனுக்கு வெளிநாட்டில் இருந்து கோடி கோடியாக பணம் கொட்டுகிறது என்றும், ஒரு வீடியோ பேசினால் இரண்டு லட்சம் கிடைப்பதாகவும் கதை அளந்து விடுகின்றனர். என் வீட்டை சோதனையிட்டபோது, பிரபாகரன் புத்தகங்களும், சீமானின் ‘திருப்பி அடிப்பேன்’ புத்தகமும் மட்டுமே கிடைத்தது. வழக்கு இல்லை என்றால் எங்களுக்கு கிழக்கு விடியாது என்று துணிந்து நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி. வழக்கை பார்த்து நாங்கள் ஒருபோதும் பயந்து ஓடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: