சென்னை மெட்ரோ தொழில்நுட்ப குழுவினர் கொடைக்கானல்-கும்பக்கரை ரோப்கார் திட்டம் குறித்து ஆய்வு

கொடைக்கானல்: கொடைக்கானல் – கும்பக்கரை இடையிலான ரோப்கார் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சென்னை மெட்ரோ கார்ப்பரேஷன் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகவும் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளகெவி கிராமம் வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை வரை ரோப்கார் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான வழித்தடம் குறித்து டெல்லி ரோப்கார் வல்லுநர்கள், சென்னை மெட்ரோ கார்ப்பரேசன் தொழில்நுட்ப வல்லுனர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று ரோப்கார் மூலம் கொடைக்கானல் நகரை இணைக்க முக்கிய பகுதியாக உள்ள பேருந்து நிலைய வளாகம், வட்டக்கானல், பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

வட்டக்கானல் மலைத்தொடர்களில் ரோப் கார் அமைப்பதற்கு சாதக, பாதகங்கள், அதற்கான சாத்தியக்கூறுகள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் உள்ள நிறை குறைகள் என பல்வேறு நிலைகள் குறித்து சென்னை மெட்ரோ கார்ப்பரேசன் இயக்குனர் சித்திக் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணிகளின் ஆய்வு கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவில் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என அக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: