கோவில்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அதிமுக, பாஜ கூட்டணியில் த.வெ.க. இணைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பா என்று கேட்கிறீர்கள்? அத்தைக்கு மீசை முளைத்த பிறகு தான் சித்தப்பா என்று சொல்ல முடியும். யூகங்கள், விருப்பங்கள் செய்திகளாக பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட த.வெ.க., பாஜ-அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.
ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டு சேர்ந்தாலும் சரி, பாஜ, அதிமுக கூட்டணியில் த.வெ.க சேர்ந்தாலும் சரி, என்ன முயற்சி செய்தாலும், மோடி குட்டி கரணமே போட்டாலும் ஒன்றும் நடக்காது, திமுக கூட்டணி வெற்றி பெறும். நான் வழக்கம் போல தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். 2029 தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடி உட்காரும் வாய்ப்பே கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது.
விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் என்ற கருத்து பரிமாற்றம் நடைபெற்று தெரியும். நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு பண்பாளர், மனிதாபிமானமுள்ள பண்பாளர். யாரையும் புண்படுத்தி எப்போதும் பேசமாட்டார். ரொம்ப யோசனை செய்து அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து விட்டார்.
கற்பனையாக புதுக்கட்சிக்காரர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென அவரைப் பத்தி சொல்கின்றனர். தனியாக போய் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சித் தலைவர் (விஜய்) பற்றி சொல்வார். அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியும். அதை நான் சொல்ல விரும்பவில்லை. தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கம் செய்ய சொல்லி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் சரியான நடவடிக்கை, நடந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
