ஆக்கிரமிப்புகள் அகற்றம்; பழநி சாலைகள் பளீச்

பழநி: பழநியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பழநி அடிவார பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் வசம் உள்ள பாளையம் ரோடு, பூங்கா ரோடு பகுதிகள் பக்தர்கள் கோயிலுக்கு முக்கிய வழித்தடங்களாகும். இங்கு ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் இச்சாலைகளில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

சாலையோர பிளாட்பாரங்களில் அமைக்கப்பட்டிருந்த பழக்கடைகள், உணவுக்கடைகள், பொம்கைக்கடைகள் போன்றவை அகற்றப்பட்டன.  மேலும் சாலையோரம் இருந்த கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆக்கிரமிப்பாளர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் காரணமாக இச்சாலைகள் பளீச்சென மாறியதால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: