டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஷாகீன்பாக் போராட்டக்காரர்கள் மீது மர்ம ஆசாமி திடீர் துப்பாக்கிச்சூடு: சுற்றி வளைத்து பிடித்தனர் போலீசார், பொதுமக்கள்

புதுடெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் ஜமியாநகர் ஷாகீன்பாக்கில் நேற்று மர்ம ஆசாமி ஒருவர் திடீரென துப்பாக்கியால் இருமுறை சுட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கும் பதற்றம் நிலவியது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன், ஜமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்கும் முன், நேற்று மாலை 5 மணி அளவில், துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு ஆசாமி ஷாகீன்பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை மிரட்டும் வகையில், இருமுறை போலீசாரின் தடுப்புகளை நோக்கி சுட்டார்.

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‘‘கபில் குஜ்ஜார் என்ற அந்த ஆசாமி போலீசாரின் தடுப்பை நோக்கி இரு முறை சுட்டார். அவரை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்’’ என்றார். காவல் துறை துணை ஆணையர் (தென்கிழக்கு) சின்மோய் பிஸ்வால் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிடிபட்டவர் கூட்டத்தினரை நோக்கி சுடுவதற்கு முன், ‘இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே முடிவு எடுக்க முடியும். மற்ற யாரும் எடுக்க முடியாது’ என்று முழக்கமிட்டார். அவரது அடையாளம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: