100 நாள் வேலை திட்டத்தை அழிப்பது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்: உரிமைகளை காக்க ஒன்றிணைய சோனியா காந்தி அழைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரபல ஆங்கில பத்திரிகையில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புல்டோசர் மூலம் அழிப்பு’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
100 நாள் வேலை உறுதி திட்டம், மகாத்மா காந்தியின் அனைவரின் நலன் என்ற தொலைநோக்கு பார்வையை உணர்ந்து வேலை செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை நடைமுறைப்படுத்தியது. கிராமப்புற இன்னல்களை சமாளிப்பதற்கான இந்த வேலை உறுதி திட்டம் இப்போது புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது ஒரு சிறிய பிரச்னை மட்டுமே. அதை விட பெரிதாக இந்த திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பே அழிக்கப்பட்டுள்ளது.

ஜி ராம் ஜி எனும் மோடி அரசின் புதிய சட்டம் பெருநிறுவனங்களுக்கான சாதகமான ஏற்பாடே தவிர வேறொன்றுமில்லை. இந்த சட்டம், புதிய திட்டத்தின் வரம்பை ஒன்றிய அரசு தனது விருப்பப்படி அறிவிக்கும் கிராமப்புறங்களுக்கு மட்டுமே என்ற வகையில் சுருக்கியுள்ளது. வரம்பற்ற ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டிற்குப் பதிலாக, இப்போது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை வரம்புக்குட்படுத்துகிறது. எனவே, வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கை மக்களின் தேவைகளை விட ஒன்றிய அரசின் முன்னுரிமைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மிகப்பெரிய தாக்கங்களில் ஒன்று, கிராமப்புற இந்தியாவில் நிலமற்ற ஏழைகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்ததுதான். இது விவசாயக் கூலித் தொழில் செய்பவர்களை உயர்த்தியது. ஆனால் புதிய சட்டத்தின் கீழ் மோடி அரசாங்கம் கூலி உயர்வைத் தடுக்க முயற்சிக்கிறது. இது உண்மையில் நடந்திருக்க வேண்டியதற்கு முரணானது. செலவின் கணிசமான பகுதியை மாநிலங்கள் மீது சுமத்துவதன் மூலம், இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதிலிருந்து மாநிலங்களை மோடி அரசாங்கம் பின்வாங்கச் செய்கிறது. ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநிலங்களின் நிதிநிலை மேலும் சீர்குலையும்.

வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாக போலியான பிம்பத்தை முன்வைக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து காரணங்களாலும், அது நிச்சயமாக அவ்வாறு இருக்காது. மோடி அரசாங்கத்தின் நோக்கங்களின் உண்மையான தன்மையை, இந்த திட்டத்தை நசுக்குவதில் அதன் பத்தாண்டுகால சாதனைப் பதிவிலிருந்து புரிந்துகொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் இந்த திட்டத்தை கேலி செய்தவர் தான் பிரதமர் மோடி.

வேலை செய்வதற்கான உரிமை அழிக்கப்படுவதை தனித்துப் பார்க்கக்கூடாது. மாறாக ஆளும் வர்க்கம் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டிற்கான அதன் உரிமை அடிப்படையிலான பார்வை மீதும் நடத்தும் நீண்டகாலத் தாக்குதலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். மிகவும் அடிப்படையான வாக்களிக்கும் உரிமை முன்னெப்போதும் இல்லாத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தகவல் ஆணையர்களின் சுயாட்சியைப் பலவீனப்படுத்தும் சட்டத் திருத்தங்கள் மூலமாகவும், தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு சட்டத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டதன் மூலமாகவும் தகவல் அறியும் உரிமை நசுக்கப்பட்டுளச்ளது.

கல்வி பெறும் உரிமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. வன நிலங்களைத் திசைதிருப்புவதற்கு அனுமதி அளிப்பதில் கிராம சபைக்கு இருந்த அதிகாரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. 3 கறுப்பு வேளாண் சட்டங்கள் மூலம் அரசாங்கம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உரிமையை மறுக்க பாஜ அரசு முயற்சித்தது. இந்த வரிசையில், 2013ம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் கூட அடுத்ததாக ரத்து செய்யப்படும் பட்டியலில் இடம்பெறக்கூடும். எனவே, நம் அனைவரையும் பாதுகாக்கும் உரிமங்களை பாதுகாக்க முன்னெப்போதையும் விட இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அரசு திரும்ப பெற வேண்டும்
சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், ”ஜி ராம் ஜி சட்டம் ஏழைகளின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஒன்றிய அரசு இதனை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் ஏழைகளை கடுமையாக பாதிக்கும். மாநிலங்கள் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.

Related Stories: