வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்

 

புதுடெல்லி: அணுசக்தித் துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வழிவகை செய்யும் மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அணுசக்தித் துறையில் மின் உற்பத்தி செய்யும் அதிகாரமானது இந்திய அணுமின் கழகம் போன்ற அரசு நிறுவனங்களிடம் மட்டுமே இருந்தது. கடந்த 1962ம் ஆண்டு இயற்றப்பட்ட அணுசக்திச் சட்டம் மற்றும் 2010ம் ஆண்டின் சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவை தனியார் நிறுவனங்கள் இத்துறையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருந்தன. இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அணுமின் உற்பத்தியில் அரசின் ஏகபோக உரிமையே நீடித்து வந்தது.
இந்நிலையில், ‘சாந்தி’ என அழைக்கப்படும் அணுசக்தித் துறையின் மேம்பாட்டிற்கான 2025ம் ஆண்டின் புதிய மசோதா, சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த புதிய மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அணுமின் நிலையங்களை அமைக்கவும், நிர்வகிக்கவும் தனியார் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசுத் தரப்பில் கூறுகையில், ‘வரும் 2047ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தியை எட்ட வேண்டும் என்ற இலக்கை அடைய இச்சட்டம் உதவும்; எனினும் யுரேனியம் சுரங்கம் மற்றும் எரிபொருள் செறிவூட்டல் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான இத்துறையில் தனியாரை அனுமதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

Related Stories: