100 சதவீத வரி விலக்குடன் இந்தியா-நியூசி. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த ஆண்டு அமலுக்கு வரும்

புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகத்தை பன்முகப்படுத்த பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்திருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இரு நாட்டு வர்த்தக அமைச்சகங்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதன்படி, இந்தியாவிலிருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே போல, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 95 சதவீத வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய கோரிக்கையாக இருந்த பால்வளத்துறையில் இந்தியா எந்த வரிச் சலுகைகளையும் வழங்கவில்லை.

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த 3 மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகி, அடுத்த ஆண்டிலிருந்து செயல்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.1.8 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதி அளித்துள்ளது. 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டதன் மூலம் ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், கடல்சார் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், கைவினைப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், தொழில்முறை சேவைகள், கல்வி, நிதிச் சேவைகள், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் பிற வணிகச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இந்திய சேவை வழங்குநர்களுக்கும் உயர் திறன் வேலைவாய்ப்புகளுக்கும் கணிசமான புதிய வாய்ப்புகளைத் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய வல்லுநர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நியூசிலாந்தில் படிக்கும் போதே வேலைவாய்ப்புகள் பெறுவதையும், படிப்புக்கு பிந்தைய வேலைவாய்ப்புக்கள், பிரத்யேக விசா உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. திறன் வாய்ந்த இந்திய வல்லுநர்கள் நியூசிலாந்தில் 3 ஆண்டு வரை தங்கி பணியாற்றுவதற்கு 5,000 விசா ஒதுக்கீடு செய்வதையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் விவசாயத்திற்கும் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. பழங்கள், காய்கறிகள், காபி, மசாலாப் பொருட்கள், தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவைகளுக்கான நியூசிலாந்தின் சந்தையை இந்திய விவசாயிகள் அணுக வழிவகுக்கிறது. உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்தவும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்றும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு வர்த்தகம் 2 மடங்கு அதிகரிக்கும்
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்புப் பொருளாதார உறவுகளை கணிசமாக ஆழப்படுத்தும். பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்க களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்துவது குறித்தும், அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்திலிருந்து இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வது குறித்தும் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் லக்சனும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு வர்த்தகம்
கடந்த 2023-24ம் ஆண்டில் இருதரப்பு வணிக பொருட்களின் வர்த்தகம் ரூ.11,700 கோடியாகவும், இருதரப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தகம் 2024ம் ஆண்டில் ரூ.21,600 கோடியாகவும் உள்ளது. இதில், பயணத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகளின் வர்த்தகம் மட்டும் ரூ.11,600 கோடியாகும்.

5 கண்கள் நாடுகளில் 3 பேருடன் ஒப்பந்தம்
ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘‘இது பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் இறுதி செய்யப்பட்ட 7வது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம். இதற்கு முன் இந்த அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஈஎப்டிஏ கூட்டமைப்பு, ஓமன் மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நியூசிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் பெண்கள் என்பதும் சிறப்பு. இந்தியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளராக அமைச்சகத்தின் இணை செயலாளர் பெடல் தில்லான் இருந்தார். ஐந்து கண்கள் கூட்டணியின் 3 உறுப்பினர்களுடன் (ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து) இதுவரை தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளது’’ என்றார்.

Related Stories: