சிம்லா: இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது, அந்த நோயாளியை ஒரு டாக்டர் கொடூரமாக தாக்கும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்லாவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் சிங் என்ற இளைஞர் சிகிச்சைக்காக வந்த போது அவர் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. நோயாளியிடம் டாக்டர் மரியாதைக்குறைவாக பேசினார் என்றும் மரியாதையுடன் பேசுமாறு வேண்டுகோள் விடுத்த போது தன்னை டாக்டர் தாக்கினார் என்று அந்த இளைஞர் கூறினார்.
இதை கண்டித்து இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அராஜகமாக நடந்து கொண்ட டாக்டரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில்,நோயாளியை தாக்கிய டாக்டர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
