புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. அக்கூட்டணியில் உள்ள பாஜ 89, ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வென்றது. இதன் மூலம் நிதிஷ்குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைத்து ஒருமாதம் கழித்து, நிதிஷ்குமார் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது நிதிஷ் குமாருடன் பீகார் துணை முதல்வரான பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக சம்ராட் சவுத்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக நிதிஷ் குமார், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், பீகாரின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை நிதிஷ் சந்தித்திருப்பதன் மூலம் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம் மகர சங்கராந்திக்குப் பிறகு நடைபெறும் என கூறப்படுகிறது.
