கோழிக்கோடு: சிறப்பு தீவிர திருத்தத்தால் பீகாரில் 75 தொகுதிகளில் முடிவுகள் மாறியது என்று கூறிய நிர்மலா சீதாராமன் கணவர் பரகலா பிரபாகர், உபி, தமிழ்நாட்டில் மிகவும் மோசம் என்று எச்சரித்து உள்ளார். நாடு முழுவதும் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவருமான பரகலா பிரபாகர், கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் பிரச்சினையை விடவும் மிக முக்கியமானது. தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறது அல்லது எந்தக் கட்சி தோற்கிறது என்ற கேள்வி அல்ல. இது இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கோ அல்லது இரட்டைப் பதிவுகளைத் தவிர்ப்பதற்கோ இலக்கு வைக்கப்படவில்லை.
பீகாரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 8.22 கோடி. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, அது 7.42 கோடியாகக் குறைந்தது. சுமார் 80 லட்சம் மக்களால் தங்கள் பெயர்களைப் பட்டியலில் காண முடியவில்லை. இதன் நோக்கத்தை நான் சந்தேகித்தால் அது தவறா?. அங்கு பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 60 லட்சம் குறைந்திருந்தது. மேலும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. பெண்கள் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களை நீக்க இலக்கு வைப்பதாக சந்தேகிக்க காரணம் உள்ளது.
மேலும் இறந்த இளம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது அவர்களின் மக்கள்தொகை விகிதத்துடன் பொருந்தவில்லை. சிறப்புத் தீவிர திருத்தத்தின் விளைவாக, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 75 தொகுதிகளின் முடிவுகள் மாறியது. சிறப்புத் தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் பீகாரை விடவும் மிகவும் மோசமாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 2.93 கோடி பேர் நீக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு பேசினார்.
