குடிபோதையில் ஒரு பைக்கில் 5 பேருடன் சாகசம் வாலிபருக்கு நூதன தண்டனை: திருச்சி நீதிபதி தீர்ப்பால் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு

திருச்சி: குடிபோதையில் ஒரே பைக்கில் 5 பேருடன் சாலையில் சாகசம் நிகழ்த்திய வாலிபருக்கு திருச்சி நீதிபதி நூதன தண்டனை வழங்கினார். திருச்சி கே.கே. நகரை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பாலமுருகன் (18). கடந்த சில தினங்களுக்கு முன் ஒரே பைக்கில் தனது சகோதரன் உள்பட 5 பேருடன் மாநகரில் சாலையில் தாறுமாறாக சென்றார். அப்போது அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த ஒருவர் அதை வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை பார்த்த போலீசார் பாலமுருகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் வழக்குப்பதிந்து திருச்சி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாலமுருகன் இளைஞராக இருப்பதால் அவர் திருந்தவும், அவர் மூலம் மற்ற இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ளும் வகையிலும் ஒரு தீர்ப்பை வழங்கினார்.

அதன்படி பாலமுருகன் 24 (நேற்று) மற்றும் 25ம் தேதி (இன்று) இரண்டு நாட்கள் திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.அதன்படி, பாலமுருகன் திருச்சி போக்குவரத்து புலனாய்வு (தெற்கு) இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் என்பவருடன் நேற்று இணைந்து இந்த பணியில் ஈடுபட்டார். இதற்காக அவருக்கு ரிப்ளக்டர் உள்ள ஓவர் கோட் கொடுக்கப்பட்டு இருந்தது. போலீசாருடன் ஒரு இளைஞர் இந்த பணியை செய்வதை அனைத்து வாகன ஓட்டுனர்களும் கூர்ந்து கவனித்து சென்றனர். இந்த தண்டனை போக்குவரத்து விதி மீறும் அனைவருக்கும் நல்ல பாடம் என கூறியபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

Related Stories: