அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிடக்கோரிய வழக்கு: தொல்லியல் துறை இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: அழகன்குளத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின் முடிவுகளை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில தொல்லியல்துறை இயக்குனர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டதில் அழகன்குளம் என்ற இடத்தில் மத்திய அரசின் சார்பாக தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் என்ற திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் அழகன்குளம் என்கின்ற பகுதியில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாள சான்றுகள் ஆங்காங்கே தென்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தொல்லியல்துறை ஆய்வுகளை மேற்கொன்டு வருகிறது. இதுவரை மத்திய, மாநில அரசுகளின் சார்பாக 7 முறை அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரையும் எந்தவித தெளிவான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. 1992ம் ஆண்டு ஒரே ஒரு முறை அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையும் விரிவான அறிக்கையாக இல்லை. எனவே இங்கு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதற்கான அறிக்கையை விரைவாகவும், தெளிவாகவும் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடும் பட்சத்தில் கீழடியை போன்று பல்வேறு வரலாற்று உண்மைகள் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல அங்கு கிடைக்கப்பெற்ற அரியவகை பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுவரை அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகள் ஏன் வெளியிடப்படவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறிக்கை தயாரிப்பது மற்றும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை ஒரு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: