சேலம் அருகே கிராம மக்கள் பீதி: மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலி: ஆற்றில் நீந்திச்சென்று உடல் அடக்கம்

காடையாம்பட்டி: சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு மாணவர் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் உடலை சுடுகாடு வசதியில்லாததால் ஆற்றில் நீந்திச்சென்று அடக்கம் செய்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தாத்தியம்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி தேவி. இவர்களது மகன் பிரசன்னா பிரியன்(18). இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசன்னாபிரியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு செம்மாண்டப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரசன்னாபிரியன் மாலை வீடு திரும்பும்போது மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.

இதையடுத்து, மீண்டும் மருத்துவரிடம் கூட்டிச் சென்று காண்பித்துள்ளார். அவர், மறுபடியும் ஒரு ஊசி போட்டு அனுப்பி விட்டார். வீட்டிற்கு வந்து படுத்த பிரசன்னாபிரியன் இரவு முழுவதும் கடும் காய்ச்சலால் துடித்துள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் அருகில் சென்று பார்த்தபோது பிரசன்னாபிரியன் இறந்து கிடப்பதை கண்டு கதறி துடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரசன்னாபிரியனுக்கு சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ள செம்மாண்டப்பட்டிக்கு சென்று தொடர்ந்து 3 நாட்கள் ஊசி மட்டும் போட்டு சிகிச்சையளித்து வந்துள்ளனர். காய்ச்சல் அதிகரித்தபோதிலும், ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முறையில் ரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சையளிப்பதற்காக ஏற்பாடுகளை செய்யாததால் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் அப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருவதால், கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார பணிகளை முடுக்கி விட்டு, காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம காய்ச்சலுக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே காடையாம்பட்டி  அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில், யாராவது இறந்தால், அவர்களை  சரபங்கா ஆற்றங்கரையில் அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் அப்பகுதிக்கு கொண்டு  செல்ல பாதை இல்லை. சடலத்துடன் ஆற்றினுள் இறங்கி மறுகரைக்கு எடுத்துச்செல்ல  வேண்டும். நேற்று மர்மகாய்ச்சலால் இறந்த கல்லூரி மாணவன்  பிரசன்னாபிரியன் உடலை அடக்கம்  செய்ய கிராமமக்கள் கொண்டு சென்றனர். சரபங்கா ஆற்றில் தண்ணீர்  சென்றதால், லாரி டியூப்பில் காற்றை நிறப்பி, அதன் மீது  மாணவனின் சடலத்தை தொட்டில் கட்டி வைத்து  தண்ணீரில்  நீந்தியவாறு  ஆற்றை  கடந்து சென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,  கிராமத்தில் சுடுகாடு அமைத்துதர வேண்டும் அல்லது, ஆற்றினை கடக்க பாலம்  கட்டித்தர வேண்டும். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள்  கண்டுகொள்ளவில்லை. ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில், சடலத்துடன்  நீந்திச்செல்ல வேண்டியுள்ளது என்றனர்.

Related Stories: