நெல்லை: குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், முறையான ஊதியம் வழங்ககோரி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலத்திற்கு மனு அளிக்க திரண்டு வந்தனர். நிர்வாகிகள் மட்டும் சென்று மனு அளிக்கலாம் என போலீசார் தடுத்ததையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின் முக்கிய நிர்வாகிகள் சென்று கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனு விபரம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தினமும் 4 கோடி மக்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் மீட்டர் ரீடர், எலக்ட்ரீசியன், மஸ்தூர், பம்ப் ஆபரேட்டர், பிளம்பர் என பல்வேறு பணிகளில் நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளோம்.ரூ.18 ஆயிரத்து 300 ஊதியம் வழங்குவதாகவும் கணக்கு காண்பிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு ஊதியமோ ரூ.4 ஆயிரத்து 200 முதல் 5 ஆயிரத்து 500 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து கடந்த 8 ஆண்டுகளாக அரசிற்கு மனு அளித்து வருகிறோம். எங்களுக்கு ஊதிய உயர்வு, முறையான இஎஸ்ஐ, இபிஎப் போனஸ், வாரிய அடையாள அட்டை, சீருடை ஆகியவற்றை வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.