இந்து மதம் அமைதியின் மறுவடிவம்: ஊர்மிளா மாடோன்கர் திடீர் பல்டி

மும்பை: இந்து மதத்தை இழிவு படுத்தியதாக தனக்கு எதிராக செய்யப்பட்ட புகார் போலியானது என்றும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் நடிகையுமான ஊர்மிளா மாடோன்கர் தெரிவித்தார். மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளா மாடோன்கர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் இந்து மதத்தை அவமதித்ததாக கூறி பாஜ  கட்சியை சேர்ந்த சுரேஷ் நகுவா என்பவர் பவாய் போலீசில் புகார் செய்துள்ளார். இந்து மதம்தான் உலகத்திலேயே வன்முறையான மதம் என்று ஊர்மிளா கூறியிருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்து மதம் வன்முறையான மதம் என்று நான் கூறியதே இல்லை என்று ஊர்மிளா மாடோன்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது: எனக்கு எதிராக போலீசில் செய்யப்பட்ட புகார் போலியானது. என் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. உள்நோக்கத்தோடு என் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. பாஜ.வைச் சேர்ந்தவர்தான் இந்த புகாரை  செய்துள்ளார். இந்து மதம் அமைதியின் மறு உருவம் ஆகும். உலகம் ஒரு குடும்பம் என்று இந்து மதம் கூறுகிறது. அகிம்சையை இந்து மதம் வலியுறுத்துகிறது. அகிம்சையே மேன்மையானது. அகிம்சையை கடைப்பிடிப்பது முதல் கடமை ஆகும்  என்றும் இந்து மதம் கூறுகிறது. இந்து மதத்தின் போதனைகளை நான் நம்புகிறேன். இந்து மதம் என்ற பேரில் பாஜ நாட்டு மக்கள் இடையே பிளவை ஏற்படுத்துகிறது. வன்முறை எண்ணங்களை மக்களின் மனதில் விதைக்கிறது.  மக்களை பாஜ தவறாக வழிநடத்துகிறது. பாஜ.வின் இந்த நடவடிக்கைகளைத்தான் நான் பேட்டியில் கண்டித்தேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: