டேராடூன்: “கேதார்நாத், பத்ரிநாத் கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல” என பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் ஆளுநரும், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான குர்மித் சிங் உள்பட நீண்டகாலமாக கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலுக்கு வருகை தரும் சீக்கிய மற்றும் ஜெயின் பக்தர்களை பற்றி பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் ஹேமந்த் திவேதியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஹேமந்த் திவேதி, “கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. இவை ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட வேத பாரம்பரியத்தின் மையங்கள். இந்திய அரசியலமைப்பின் 26வது பிரிவு ஒவ்வொரு மதத்துக்கும் அதன் சொந்த மத விவகாரங்களை நிர்வகிக்க உரிமை அளிக்கிறது. இந்த முடிவு யாருக்கும் எதிரானது அல்ல. ஆனால் பல நூற்றாண்டுகள் பழமையான நம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தூய்மையை பாதுகாப்பதற்கான முடிவு.
மசூதிகள், தேவாலயங்களில் மத நடத்தை தொடர்பான விதிகள் உள்ளதை போலவே, இந்து மத கோயில்களிலும் பாரம்பரிய விதிகள் உள்ளன. ஆனால் சனாதன மரபின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் யாருக்கும் கோயிலுக்கு வர எந்தவித தடையும் இல்லை. அவர்கள் வரவேற்கப்படுவார்கள்” என கூறினார்.
