புதுடெல்லி: இந்தியாவில் தேடப்படும் 71க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பணியாளர், பொதுக்குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி,
” 2024-2025ம் ஆண்டில் இந்தியாவில் தேடப்படும் நபர்கள் அல்லது தப்பியோடிய 71 நபர்கள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டனர். இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். கடந்த நிதியாண்டில் மொத்தம் 27 தப்பியோடிவர்கள் அல்லது தேடப்படும் நபர்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். 2024ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்திய புலனாய்வு அமைப்புகளால் நடத்தப்படும் விசாரணையில் ஒத்துழைப்பு கோரி வெளிநாட்டு அதிகாரிகளுக்கு 74 நீதித்துறை கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அவற்றில் 54 சிபிஐ வழக்குகள் சார்ந்தவை மற்றும் 20 மாநில சட்ட அமலாக்க மற்றும் பிற மத்திய அமைப்புக்களை சார்ந்தவை. விசாரணை அல்லது தண்டனையை அனுபவிப்பதற்காக தேடப்படும் தப்பியோடிய குற்றவாளிகளுக்கு எதிராக என்சிபி பல்வேறு இன்டர்போல் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது. இதில் 126 ரெட் கார்னர் நோட்டீஸ், 89 ப்ளூ நோட்டீஸ், 24 மஞ்சள் நோட்டீஸ் , 7 கருப்பு நோட்டீஸ் அடங்கும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
