அரசியலமைப்பு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் கேடயம்: ராகுல்காந்தி பெருமிதம்

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்தியனின் மிகப்பெரிய ஆயுதம் மற்றும் கேடயம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் 77வதுகுடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய கார்கே, நமது அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளையும் உணர்வையும் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதே காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.

மேலும் கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,” ”நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை நமது தேசத் தந்தைகளால் நமக்கு வழங்கப்பட்ட நீடித்த விழுமியங்கள். அவற்றை பாதுகாப்பது நமது புனிதமான கடமையாகும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து தியாகங்களையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இதுவே நமது முன்னோர்களின் தியாகங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். மீண்டும் ஒருமுறை இந்த மகத்தான குடியரசு தினத்தில் உங்கள் அனவைருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,”நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியனின் மிகப்பெரிய ஆயுதம். அது நமது குரல். நமது உரிமைகளை பாதுகாக்கும் கேடயம். நமது குடியரசு இந்த உறுதியான அடித்தளத்தின் மீது நிற்கிறது. அது சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் மூலமாக மட்டுமே வலுப்பெறும். அரசியலமைப்பை பாதுகாப்பது இந்தியக் குடியரசை பாதுகாப்பதாகும். இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். ஜெய் ஹிந்த் ஜெய் சம்விதான்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் எக்ஸ் தளத்தில் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கூட்டு விழிப்புணர்வு தேவை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது குடியரசு தின வாழ்த்தில்,”குடியரசு நாட்டை பாதுகாப்பதற்கு, கூட்டு விழிப்புணர்வு தேவை. அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகளுக்கு தங்களது உறுதிப்பாட்டை பொதுமக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். நமது குடியரசும், நமது அரசியலமைப்பும் இன்று நமது கூட்டு விழிப்புணர்வை கோருகின்றன” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: