பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தக்கூடாது – காவல்துறைக்கு ஐகோர்ட் ஆர்டர்

டெல்லி : பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை நீதிமன்ற ஆவணங்களில் வெளிப்படுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுமியின் தாய்க்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகவும் இது சிறுமிக்கு பிடிக்காததால் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததாகவும் கூறி ஜாமீன் வழங்கக் கோரினார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே மேற்கண்ட வழக்கின் ஆவணங்களின் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் குறிப்பிட்டு இருந்தது குறித்து நீதிபதி கவலை தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு அவர் ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். அதில், “இந்த வழக்கு தொடர்புடைய சம்பந்தப்பட்ட பகுதியின் துணை போலீஸ் கமிஷனர் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவரின் பெயர், பெற்றோர் அல்லது முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் எந்த ஒரு நிலை அறிக்கை அல்லது ஆவணத்திலும் வெளியிடப்படாமல் இருப்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கும் பொருத்தமான வழிமுறைகளை மீண்டும் வலியுறுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்,”இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: