பத்திரப்பதிவுக்கு இனி அசல் ஆவணங்கள் கட்டாயம்: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை: பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் காரணமாக நில மோசடிகளை தடுக்க தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைத்துள்ளது. முக்கிய அம்சமாக, இனி எந்தவொரு சொத்தையும் விற்பனை செய்யவோ அல்லது தானமாக வழங்கவோ பதிவு அலுவலகத்திற்கு செல்லும்போது, அந்த சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இதற்கு முன், அசல் ஆவணம் தொலைந்துவிட்டதாக கூறி பொய் புகார் அளித்தோ அல்லது நகல் ஆவணங்களை வைத்தோ முறைகேடாக சொத்துப்பதிவு நடந்தன. இனி அப்படி செய்ய முடியாது. இந்த சட்டம் மோசடி பத்திரப்பதிவில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்குகிறது. பொய் தகவல்களை அளித்து சொத்துப்பதிவு செய்பவர்களுக்கும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளுக்கும் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சில குறிப்பிட்ட நேரங்களில் அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிலங்களை மாற்றும்போது இதற்கு விதிவிலக்கு உண்டு. மேலும், நீதிமன்றத்தின் மூலம் சொத்து விற்பனை நடக்கும்போது, குடும்பத்திற்குள் நடக்கும் பாகப்பிரிவினையின் போது ஒருவரிடம் மட்டும் அசல் இருந்தால்போதும் பத்திரப்பதிவு செய்யலாம்.

அதனால் அசல் ஆவணங்களை மிகப்பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தொலைந்து போனால், காவல்துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற சான்றிதழ் பெறுவது உள்பட பல சட்ட நடைமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சட்டப்படி மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டா சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறிய முடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். மேலும் உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: